தமிழக பட்ஜெட் 2018-19 கல்வி வளர்ச்சித் துறை பெற்றுள்ள கவனம்

2018-2019 ஆண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதில் அதிகப்படியாக பள்ளிக்கல்வித் துறைக்கு 2018-2019 ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் 27,205.88 கோடி ரூபாயும், உயர்கல்வித் துறைக்காக ரூ.4,620.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2018-19 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
பள்ளிக் கல்வி:
  1. வரும் கல்வி ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
  2. பள்ளிக்குச் செல்லாத 33,519 குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  3. சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டு தமிழக பாடத்திட்டத்திலும் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
  4. நபார்டு வங்கியின் உதவியுடன் ரூ.200 கோடி செலவில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
  5. 2018-2019 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  6. 2017-18ம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளால் ரூ.54.50 கோடி பள்ளிகளில் கழிவறைகளைத் தூய்மையாக பராமரிக்க வழங்கப்பட்டுள்ளது, இத்திட்டம் வரும் ஆண்டும் தொடர்ந்து செயல்படும்.
  7. தரமான கல்வியை வழங்குவதற்காக மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சீருடை, புத்தகம், மிதிவண்டி, இலவச பேருந்து சீட்டு ஆகிய நலத்திட்டங்களுக்காக ரூ.1,653.89 கோடி 2018-19 ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  8. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது, இத்திட்டத்திற்காக ரூ.313.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  9. பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழுங்கும் திட்டத்திற்காக ரூ.758 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  10. அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக ரூ.1,750 கோடியும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்திற்காக ரூ.850 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  11. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை செயற்படுத்திட ரூ.200.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  12. சத்துணவு திட்டத்திற்கு ரூ.5,611 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வி:
  1. கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியின் விக்டோரிய விடுதி மற்றும் ராணி மேரிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் பாரம்பரியமிக்க கட்டடங்கள் 26 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
  2. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.682.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  3. பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நல்கை தொகை புதிய கணக்கீட்டின்படி மாற்றியமைக்கப்படும்.
  4. அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு மானியமாக ரூ.250 கோடி வழங்கப்படும்.
  5. அண்ணாமலை பல்கலைக்கழகம் உட்பட அனைத்துப் பல்கலைக்கழகளுக்கும் மானியமாக வழங்குவதற்கு 500.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  6. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி உதவித் தொகையாக ரூ.129.16 கோடியும், உயர்கல்வி உதவித் தொகையாக ரூ.1,838.24 கோடி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது. 

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post