ஆசிரியர்களுக்கு 64 கலைகளும் தெரிய வேண்டும் - துணைவேந்தர் சசிரஞ்சன் யாதவ் பேச்சு / The teachers should know 64 arts - Vice Chancellor Yasav Yadav

சென்னை: ''தொழில்நுட்ப வளர்ச்சியால், தகவல் தொழில்நுட்பம் உட்பட, 64 கலைகளும், ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்,'' என, இந்திய ஆசிரியர் கல்வி நிறுவன துணை வேந்தர், சசிரஞ்சன் யாதவ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், ஏழாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலையின் நுாற்றாண்டு விழா அரங்கில், நேற்று நடந்தது.இதில், கவர்னர், பன்வாரிலால் புரோஹித், உயர் கல்வி அமைச்சர், அன்பழகன், உயர் கல்வி முதன்மை செயலர், சுனில் பாலிவால், பல்கலை துணை வேந்தர், தங்கசாமி, பதிவாளர், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, குஜராத்தில் உள்ள, இந்திய ஆசிரியர் கல்வி நிறுவன துணை வேந்தர், சசிரஞ்சன் யாதவ், பட்டங்களை வழங்கினார்.அவர் பேசியதாவது:ஆசிரியர் கல்வியை பொறுத்தவரை, சில மாற்றங்களை உருவாக்க வேண்டும். பல்கலைகள், வெறும் பட்டதாரிகளை உருவாக்காமல், திறன்மிக்க பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்.இணையதளம் வந்து விட்ட பின், அனைத்து நிலைமைகளும் மாறி விட்டன. மனிதர்களை விட, இயந்திரங்களுக்கு, அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது. எனவே, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கற்பிக்கும் முறையிலும், கற்றல் முறையிலும் மாற்றம் வேண்டும்.தற்போது, 'கூகுள், வாட்ஸ் ஆப்' தலைமுறைகளாக உள்ளனர். இன்றைய இளம் பட்டதாரிகள், மிக துடிப்புள்ளவர்களாகவும், எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் நிலையிலும் உள்ளனர். எனவே, அவர்களுக்கு ஏற்ப, கல்வியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வகுப்பறைகளை தாண்டி, பாடம் கற்றுக் கொடுக்கும் முறை தேவை. உலக விஷயங்களை, மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்றைய காலத்தில், தகவல் தொழில்நுட்பம் உட்பட, 64 கலைகளும், ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். வகுப்பறையில், மாணவர்களுக்கு நடனம் ஆடியும், நாடகம் நடத்தியும் பயிற்றுவிக்க வேண்டும்.எங்கள் கல்வி நிறுவனத்தில், ஆசிரியர் பயிற்சி அளிப்போருக்கு, கணினி பயிற்சி மட்டுமின்றி, குதிரை ஓட்டவும், நீச்சல் அடிக்கவும், துப்பாக்கி சுடவும் பயிற்சி அளித்துள்ளோம். எனவே, ஆசிரியர்கள், மிகவும் படைப்பு திறன் மிக்கவர்களாகவும், முன்னோடியாகவும் திகழ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பல்கலையின் துணை வேந்தர், தங்கசாமி, ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், 44 ஆயிரத்து, 994 பேருக்கு, பி.எட்., பட்டம்; 1,473 பேருக்கு, எம்.எட்., பட்டம்; 118 பேருக்கு, எம்.பில்., மற்றும், 21 பேருக்கு, பிஎச்.டி., பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், 162 பேர் பதக்கம், பரிசுகளுடன் சான்றிதழ் பெற்றனர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post