முதன்முதலாக தினமணியில் இன்று ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஒரு தலையங்கம் (An editorial in support of teachers today is the first of Dinamani)

அனைவருக்கும் கல்வித் திட்டம் குறித்தும், மதிய உணவுத் திட்டம் குறித்தும் மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் நாடாளுமன்றக் குழு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 15 விழுக்காடு குறைந்தும், தனியார் பள்ளிகளில் 33 விழுக்காடு அதிகரித்தும் 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துக்கான காரணம் குறித்து விவரம் கோரியிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு, காளான்கள் போல் ஆங்காங்கே பெருகிவரும் ஆங்கில வழி தனியார் பள்ளிகள் முக்கியமான காரணம் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை காரணம் கூறியிருக்கிறது. பல மாநிலங்களில் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள அரசுப் பள்ளிகளும் ஆங்கில வழி கல்விச்சாலைகளாக மாற்றப்படுகின்றன என்றும், தாய்மொழி வழிக் கல்வியைவிட ஆங்கில வழிக் கல்வி அதிகமான வரவேற்பைப் பெறுவதாகவும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதிலோ, பயிற்றுவிப்பதிலோ அரசுப் பள்ளிகளில் தயக்கம் காட்டப்படுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கல்வித் தரம் குறித்த ஆண்டறிக்கையான 'ஏஸர் 2017' சில அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளியிட்டிருக்கிறது. நாடு தழுவிய அளவில் 24 மாநிலங்களில் 14 முதல் 18 வயது வரையிலான மாணவர்களின் திறனை சோதித்தபோது, அவர்களில் 40 விழுக்காடு மாணவர்கள் கடிகாரத்தைப் பார்த்து நேரம் சொல்லக்கூட தெரியாத நிலை காணப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மாணவர்களின் தரம் குறைந்திருப்பதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களையும், தலைமையாசிரியர்களையும் குறை கூறுவது என்பது சரியான அணுகுமுறையல்ல என்று மனிதவள மேம்பாட்டுத் துறையின் அறிக்கை அடிக்கோடிட்டு தெரிவித்திருக்கும் செய்தியை மறுப்பதற்கில்லை.

மாணவர்களின் கற்கும் திறனும், கல்வியின் தரமும் குறைந்திருப்பதற்கு ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும், அர்ப்பணிப்பின்மையும்கூடக் காரணங்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதுவேதான் காரணம் என்பது சரியல்ல. அதற்கு ஆசிரியர்களின் எண்ணிக்கைக் குறைவும்கூட ஒரு முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.
தேசிய அளவில் ஆசிரியர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதுமட்டுமல்ல, 2016 டிசம்பர் மாதம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த புள்ளிவிவரத்தின்படி, தேசிய அளவில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 18 விழுக்காடு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது மட்டுமல்ல, அவர்களது வருகை நாளும் குறைவாகவே காணப்படுகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பரவலாகவே அதிருப்தியும் அசிரத்தையும் காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரசு ஊழியர்களாக்கப்பட்டிருப்பதால், அவர்கள் மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் இல்லாமல் இல்லை. ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனநிலையை ஆய்வு செய்தபோது அவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தரும் பதில்கள் நாடாளுமன்றக் குழுவை சிந்திக்க வைத்திருக்கிறது.
ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுத்தப்படாமல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பது, புள்ளிவிவரங்களைத் திரட்டுவது, தேர்தல் வேலைகளில் ஈடுபடுவது என்று தொடர்பில்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக ஆசிரியர்கள் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். தாங்கள் அரசு ஊழியர்களாக நடத்தப்படுகிறோமே தவிர, ஆசிரியர்களாக நடத்தப்படுவதில்லை என்கிற ஆதங்கம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுவதாக தெரிகிறது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2016-இல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் தேர்வு நடத்தியது. அதில் 13 விழுக்காட்டினர் மட்டுமே தகுதியானவர்களாக தரம் அறியப்பட்டார்கள். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டுத் துறை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. இன்னும்கூட அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும், தரத்தையும் உயர்த்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறியவில்லை.
2017 ஜூலைக்குள் 13 லட்சம் ஆசிரியர்களை முறையாக திறன் மேம்படுத்துவது என்று ஓர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கு இப்போது மார்ச் 2019-க்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மத்திய நிதியமைச்சரின் சமீபத்திய நிதிநிலை அறிக்கையில்கூட, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை அதிகரிக்கவும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும் அரசு முன்னுரிமை அளிக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்திருக்கிறது என்றாலும்கூட, போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறதா என்றால் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஓர் அரசும் முனைப்புக் காட்டியதாகவும் தெரியவில்லை.


52 ஆண்டுகளுக்கு முன்பு, 1966-இல், கோத்தாரி குழு இந்தியாவின் கல்வித் தரத்தை மேம்படுத்தப் பல பரிந்துரைகளை முன்வைத்தது. அதில் குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான பரிந்துரை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விழுக்காட்டில் (ஜிடிபி) ஐந்து விழுக்காடு கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பது. இதுவரை எந்த ஓர் அரசும் அதில் பாதியைக்கூட ஒதுக்கவில்லை என்பதுதான் வேதனை. இந்தியாவின் கல்வித் தரம் குறைந்திருப்பதற்கு மாணவர்களையோ, ஆசிரியர்களையோ மட்டுமே குற்றம் கூறிவிட முடியாது. அரசுக்கு முனைப்பில்லாததும் கூடக் காரணம்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post