அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி தொடக்கம்: கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் தொடக்கி வைத்தார்.

நடமாடும் புத்தகக் கண்காட்சி திட்டத்தை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். பதிப்பாளர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்: பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி, பள்ளியின் தலைமை ஆசிரியர், முதல்வர், புத்தகப் பதிப்பாளர்கள், நூல் விற்பனையாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நடைபெறும். இதற்கான நாள், நேரத்தை இருவரும் இணைந்து முடிவு செய்வர்.
நடமாடும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது குறித்து தலைமையாசிரியர் உரிய முன்னறிவிப்பு செய்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களைக் கலந்து கொள்ள செய்வார். பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் புத்தகக் கண்காட்சியை அவரவர்தம் சொந்த வாகனங்களில் வைத்தோ அல்லது பள்ளியில் ஏதாவது வசதியான அறைகளில் வைத்தோ நடத்தலாம். இதற்கான தக்க இடவசதி, குடிநீர், மின்சாரம் மற்றும் பள்ளிகளிலேயே தலைமையாசிரியர் செய்து கொடுப்பார்.

நடமாடும் புத்தகக் கண்காட்சிக்குப் பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் தேவையெனில் அவற்றைப் பதிப்பாளர்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.
சாதி, மத நூல்களுக்கு இடமில்லை: புத்தகக் கண்காட்சியில் சாதி, மதம் சார்ந்த பகைமைகளைத் தூண்டும் அல்லது சட்டத்துக்குப் புறம்பாக அமையும் நூல்கள் கண்டிப்பாக இடம்பெறக் கூடாது. மாணவர்களின் அறிவு வளர்ச்சி, சிந்தனைத்திறன், மொழிவளம், படைப்பாற்றல், அறிவியல்நோக்கு, கலை அறிவு, சுயமுன்னேற்றம், வாழ்க்கைத்திறன்கள், நாட்டுப்பற்று போன்றவற்றை ஊக்குவிக்கும் நூல்களை இடம்பெறச் செய்ய வேண்டும். பள்ளிகளில் நடத்தப்பெறும் நடமாடும் புத்தகக் கண்காட்சிகளுக்கு இருதரப்பினரும் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது.
40 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்: நடமாடும் புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் புத்தகங்களின் விலையில் குறைந்தது 10 சதவீதம் தள்ளுபடி அளிக்க வேண்டும். தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் விரும்பினால் இந்த நடமாடும் புத்தகக் கண்காட்சிகளில் பள்ளிகளுக்குத் தேவையான நூல்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். பதிப்பாளர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு நூல்களை நன்கொடையாகவும் வழங்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் 13,096 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 39.93 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றார் அமைச்சர்.

இந்த விழாவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், தியாகராயநகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.சத்தியநாராயணன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், இயக்குநர் ஆர்.இளங்கோவன், பொதுநூலகத்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், பள்ளியின் தலைமையாசிரியை இரா.தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காப்பீடு திட்டம் எப்போது?
மாணவர்களுக்கான காப்பீடு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது, அவர் கூறியது: நடமாடும் நூலகங்கள் காலையில் ஒரு பள்ளியிலும், மாலையில் ஒரு பள்ளியிலும் இயக்கப்படும். இந்தத் திட்டம் மேலும் சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். புதிய பாடத்திட்டம், புதிய சீருடைகள் வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். மாணவர்கள் காப்பீடு திட்டப் பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளோம். அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post