12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5,6,7 தேதியில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் / The Government employees are wearing a black badge on the 5,6,7 date to emphasize 12 point demands






தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் வரும் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. 

அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப்போவதாக தலைமை செயலக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தலைமை செயலக சங்க செயற்குழு கூட்டம் நேற்று மாலை தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் ஆறுமுகம், இணை செயலாளர்கள் மணிவண்ணன், அருண், பொருளாளர் ெகாளஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறியதாவது:

பஐயா ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுனர் குழுவின் காலக்கெடுவை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக இறுதி அறிக்கையை அளித்து, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பதவி உயர்வு பெற்றும் இதுவரை கட்டாய மாவட்ட பயிற்சிக்கு அனுப்பாமல் உள்ள சுமார் 100 பேரை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். 7வது ஊதியக்குழுவில் தலைமை செயலக அனைத்து நிலை பணியாளர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து, அனைவருக்கும் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் தலைமை செயலக பணியாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள கோப்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டுமனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் செலவை குறைக்க, அரசு துறைகளில் உள்ள பணியிடங்களை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு மற்றும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தலைமை செயலகத்தில் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்று பணியில் உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணி வரன்முறை செய்து, அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5, 6 மற்றும் 7ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தலைமை செயலக ஊழியர்கள் பணிக்கு வருவார்கள்.

வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மதிய உணவு இடைவேளையின்போது நாமக்கல் கவிஞர் மாளிகையின் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

வருகிற 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.

அந்த மூன்று நாட்களும் தலைமை செயலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post