நிம்மதியுடன் வெளியூர் செல்லலாம் வீட்டை போலீஸ் கேமரா காவல் காக்கும்

தமிழகத்தில் முதன்முறையாக மதுரை நகரில், வெளியூர் செல்லும்போது போலீசிற்கு தகவல் தெரிவித்தால்,வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் வசதி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.



கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது: ஏற்கனவே கூகுள் ப்ளே ஸ்டோரில் மதுரை சிட்டி போலீஸ் என்ற செயலியை 5600 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் எஸ்.ஓ.எஸ்., எனும் ஆபத்தான நேரத்தில் தொடர்பு கொள்ளும் வசதி உள்ளது. புகார் தெரிவிக்க முடியும். போலீஸ் ஸ்டேஷன் விபரம் உள்ளது.

இதோடு தற்போது பூட்டிய வீடுகளை கண்காணிக்கும் இலவச வசதி (எல்.எச்.எம்.எஸ்.,) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் கேட்கப்பட்டும் விபரங்களை பதிவு செய்து, வெளியூருக்கு செல்வதற்கு ஒரு நாள் முன்பு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டில் 'வை பை' வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கன்ட்ரோல் ரூமில் இருந்து கண்காணிப்போம். 20 நாட்கள் வரை காட்சிகள் பதிவாகும்.

ஆட்கள் நடமாட்டம் இருந்தால் பதிவு செய்த அலைபேசி எண்ணுக்கு தகவல் வரும். இமெயிலில் வீடியோ காட்சி வந்துவிடும். இதை காண 'ezviz' என்ற செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். இதற்கான யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டை நாங்கள் தருவோம். முதற்கட்டமாக இவ்வசதியை தல்லாகுளம், கூடல்புதுார் ஸ்டேஷனிற்குட்பட்ட விரிவாக்க பகுதிகளில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

எம்.பி., கோபாலகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 65 கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மதுரையில் போலீஸ் சார்பில் 150 கேமராக்கள் உட்பட மொத்தம் 3 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன, என்றார்.

எம்.பி., கோபாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சசிமோகன், ஜியோமியோ இன்பர்மேட்டிக்ஸ் நிறுவன இயக்குனர் தினேஷ்பாண்டியன், தொழில்நுட்ப இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேல், எஸ்.ஐ., திருமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post