2ம் வகுப்பு வரை வீட்டு பாடத்துக்கு தடை: பள்ளிகளில் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு


சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனு: சி.பி.எஸ்.இ., மாணவர் களுக்கு, என்.சி.இ.ஆர்.டி., என்ற, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிர்ணயித்த பாடங்களை விட, அதிகமான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை பின்பற்றாமல், தனியார் நிறுவனங்கள் வெளியிடும் புத்தகங்களை பின்பற்றுகின்றனர். 
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், &'ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு, வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது. என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பின்பற்ற வேண்டும்&' என, உத்தரவிட்டார்.இந்த உத்தரவுகளை, நிறைவேற்றியதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிர்ணயித்த பாடங்கள், பரிந்துரைத்த புத்தகங்களை தவிர, கூடுதல் பாடப் புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப் போவதாக, நீதிபதி கிருபாகரன் எச்சரித்து இருந்தார்.இதையடுத்து, இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பள்ளிக்கல்வித் துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:உயர் நீதிமன்றஉத்தரவை பின்பற்றும் வகையில், 2ம் வகுப்பு வரை, வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என, பள்ளிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 
சி.பி.எஸ்.இ., பள்ளிகளைப் பொறுத்தவரை, புத்தக சுமையை குறைக்கவும், வீட்டுப்பாடங்கள் குறித்தும், சி.பி.எஸ்.இ., பிறப்பித்த சுற்றறிக்கையை பின்பற்றவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தவிர்த்து, பள்ளி கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், பொது கல்வி வாரியம் நிர்ணயித்துள்ள பாடப் புத்தகங்களை தான் பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளின் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தும்படி, அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையை படித்த பின், நீதிபதி கிருபாகரன், பிறப்பித்த உத்தரவு:வீட்டுப் பாடம் குறித்தும், நிர்ணயிக்கப்பட்ட பாடங்கள் தான் பயிற்றுவிக்கப்படுகிறதா என்பது குறித்தும், அனைத்து பள்ளிகளிலும், திடீர் ஆய்வுகளை, அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அறிக்கை பெற வேண்டும்.பள்ளிக்கல்வித் துறையின் சுற்றறிக்கை பின்பற்றப்படுவது குறித்தும், அறிக்கை அளிக்க வேண்டும். விசாரணை, அக்., ௯ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
இயக்குனர் சுற்றறிக்கை!
பள்ளிகளில், இரண்டாம் வகுப்பு வரை, வீட்டு பாடம் தர, தடை விதித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 2ம் வகுப்பு வரை, வீட்டு பாடம் வழங்க கூடாது. இதை, பள்ளிகள் பின்பற்ற வேண்டும்.சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் பரிந்துரைப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, புத்தக சுமையை குறைக்க வேண்டும்.
வீட்டு பாடம் குறித்த உத்தரவுகளையும், சரியாக பின்பற்ற வேண்டும்.தமிழக பாடத்திட்ட பள்ளிகள், தமிழக அரசின் பொது கல்வி வாரியம் பரிந்துரைத்த புத்தகங்களை மட்டுமே, பின்பற்ற வேண்டும். இதுகுறித்து, அனைத்து மாவட்ட கல்வி ஆய்வாளர்கள், கூட்டம் நடத்தி, வீட்டுப்பாடம் குறித்த உத்தரவை, பள்ளிகள் பின்பற்றுவதை, உறுதி செய்ய வேண்டும்.மேலும், பள்ளிகளில், இதற்கான ஒப்புதல் கடிதமும் பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post