அரசுப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க புதிய உத்திகளை வகுக்க வேண்டும் !




அரசுப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க புதிய உத்திகளை வகுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

 தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் இருந்து வரும் அரை சதவீத இடைநிற்றல் விகிதத்தை 0.1 சதவீதமாகவும், இடைநிலைப் பள்ளிகளில் இருந்து வரும் 1 சதவீத இடைநிற்றலை, அரை சதவீதமாகவும் குறைக்க கடந்த ஆண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடக்கப் பள்ளி இடைநிற்றல் விகிதம் 0.88 சதவீதமாகவும், இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் 1.12 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது.

அதுபோல உயர்நிலை வகுப்புகளின் இடைநிற்றல் விகிதம் 3.75 சதவீதமாகவும், மேல்நிலை வகுப்புகளின் இடைநிற்றல் விகிதம் 1.69 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது.
 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ.30 ஆயிரத்துக்கும் கூடுதலாக செலவழிக்கப்படுகிறது. இது மத்திய அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குச் செலவழிக்கப்படும் தொகையைவிட கூடுதலாகும். மேலும் விலையில்லா மடிக் கணினி, இடைநிற்றலைத் தடுப்பதற்காக சிறப்பு உதவித் தொகையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இவற்றால் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 எனவே, மாணவர்கள் இடைநிற்றலுக்கு இலவசங்கள், நிதியுதவியையும் தாண்டி வேறு ஏதோவொரு குறை இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

 அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து பரப்புரை செய்வதன் மூலம் இடைநிற்றலைக் கட்டுப்படுத்தப் போவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு கூறியிருக்கிறது.

அரசு பள்ளிகளில் கட்டமைப்பு இல்லாமல் இத்தகைய பரப்புரைகள் பயனளிக்காது. எனவே, இடைநிற்றலை தடுப்பதற்கு கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய உத்திகளை வகுக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post