புதுக்கோட்டையில் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் மற்றும் கணித கண்காட்சி !





புதுக்கோட்டை,அக்.13 : புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் சார்பாக 46ஆவது ஜவஹர்லால் நேரு  அறிவியல், சுற்றுப்புறக் கண்காட்சி மற்றும் கணிதக் கருத்தரங்கு தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு வந்திருந்தவர்களை சந்தைப்பேட்டை பள்ளி தலைமையாசிரியர் அமுதா வரவேற்றுப் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் சு.அண்ணாமலைரஞ்சன் தலைமை தாங்கினார்.
 மாமன்னர் கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கண்காட்சியில் வைத்திருந்த பள்ளி  மாணவ, மாணவிகளின் படைப்புகளை  பார்வையிட்டு அவர்களோடு கலந்துரையாடினார்.
 
கண்காட்சியில் புதுக்கோட்டை,திருமயம்,அரிமளம்,கந்தர்வக்கோட்டை,கறம்பக்குடி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த , நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் வாழ்க்கையில் சவால்களுக்கான அறிவியல் தீர்வுகள் என்ற தலைப்பின் கீழ் விவசாயம் மற்றும் கரிம மேலாண்மை,சுகாதாரம் மற்றும் தூய்மை,வளமேலாண்மை,கழிவு மேலாண்மை,போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ,கணித மாதிரிகள் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.இதில் ஒவ்வொரு  பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த  மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1 மாணவர்கள் மட்டும் பங்கு பெறும் படைப்புகள் 78 ,8 முதல் 10 ஆம் வகுப்பு வரை இரு மாணவர்கள் பங்கு பெறும் படைப்புகள் 77, ஆசிரியர்கள் பங்கு பெறும் படைப்புகள் 4  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

 தேர்ந்தெடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.


 கண்காட்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலை,உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,வட்டார கல்வி அலுவலர்கள், முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் பெருங்களூர் பள்ளி தலைமையாசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post