4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம்




பி.எட்., படிப்பில், வரும் கல்வி ஆண்டு முதல், நான்கு ஆண்டு படிப்புகள் அறிமுகமாகின்றன. இந்த படிப்பை நடத்த, வரும், 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வழியாக, பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட கல்வியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், பி.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இதில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கு, இரண்டு ஆண்டு கால வகுப்பு நடத்தப்படுகிறது.இந்நிலையில், பிளஸ் 2 படித்து முடித்ததும், பி.எட்., சேரும் வகையில், புதிய திட்டத்தை, தேசிய கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நேரடியாக இளநிலை பட்டம் மற்றும் பி.எட்., இரண்டையும் சேர்த்து படிக்கும் வகையில், நான்கு ஆண்டு, பி.எட்., படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது.

இதுகுறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை வேந்தர், தங்கசாமி அளித்த பேட்டி:பள்ளிப் படிப்பை முடித்ததும், ஆசிரியர் படிப்பை மேற்கொள்ளும் வகையில், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த, பி.எட்., படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது. இந்த படிப்பை நடத்த விரும்பும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், டிச., 3 முதல், 31க்குள், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பல்கலையிலும், கல்லுாரியிலும், இயற்பியல், மெக்கானிக்கல், தமிழ், ஆங்கிலம், தத்துவவியல் என, பல்வேறு துறைகள் இருப்பது போன்று, கல்வியியல் படிப்புக்கும், தனி துறை உருவாக்கப்படும். இதற்கும், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.தமிழக அரசின் சார்பில், கல்வியியல் பல்கலையின், ஐந்து உறுப்பு கல்லுாரிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் - மருதுார் மற்றும் சேலம் - எடப்பாடியில், இரண்டு கல்லுாரிகள், விரைவில் திறக்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post