நெல்லை, குமரியை சேர்ந்த 80 இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் டிச.24ல் தொடக்கம் நாகர்கோவிலில் 15 நாள் நடக்கிறது

நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் வரும் டிசம்பர் 24 முதல் 15 பதினைந்து நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு அறிவியல் துறையில் மேம்பாடு அளிப்பதற்காக இளம் மாணவர் அறிவியல் திட்ட விஞ்ஞானிகள் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மாணவர்களுக்காக வருகின்ற டிசம்பர் 24ம் தேதி தொடங்கி 15 நாட்கள் முகாம் தொடர்ந்து நடைபெற உள்ளது. பயிற்சிக்கு பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் கலந்து கொள்ள தகுதி உடையவர் ஆவர். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழியல் போன்றவற்றில் தரமிக்க வல்லுநர்களால் பயிற்சிகள் நடத்தப்படும். மேலும் மாணவ, மாணவியர் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ராஜாக்கமங்கலம் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திற்கும் அழைத்துச் செல்லப்படுவர்.

பயிற்சி நிறைவு நாட்களில் மாணவ மாணவியர் சுயமாக தயாரித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாதிரிகளைக் கொண்டு அறிவியல் கண்காட்சி நடைபெறும். பயிற்சியில் கலந்துக்கொள்ள விரும்பும் மாணவ மாணவியர் இந்துக் கல்லூரி அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்று இம்மாதம் 19ம் தேதிக்கு முன்னர் பூர்த்தி செய்து அளித்தல் வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர் பட்டியல் 20ம் தேதி வெளியிடப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த 80 மாணவ, மாணவியர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். எனவே, முதலில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். கலந்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சான்றிதழ் வழங்க உள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post