சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் புதிய மாற்றம்


அடுத்த ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் மாற்றம் கொண்டு வரவிருப்பதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டில் இருந்து 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வு 2 நிலைகளாக நடைபெற உள்ளது. கணிதத்தில் பலவீனமாக உள்ள மாணவர்களும் அதிக மதிப்பெண்களைப் பெறும் வகையில், கணிதம்-அடிப்படை, கணிதம்-உயர்தரம் (ஸ்டேண்டர்டு) என்று இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடினமான பாடங்களை தேர்வுக்கு படிக்கும்போதும், அதன் முடிவுகள் வெளியிடப்படும்போதும் மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அதைக் கருத்தில் கொண்டு, கணிதத்தில் பலவீனமாக இருக்கும் மாணவர்களும் அதிக மதிப்பெண்களைப் பெறும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.
2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு கணிதம்-அடிப்படை, கணிதம்-உயர்தரம்(ஸ்டேண்டர்டு) என்று 2 விதமான கணிதத் தேர்வு நடத்தப்படும். பாடத்திட்டம், கற்பித்தல், வகுப்புத் தேர்வுகள் என அனைத்தும் 2 தேர்வுகளுக்கும் ஒரேமாதிரியாகதான் இருக்கும். அதனால் மாணவர்கள் பாடத்திட்டத்தை முழுவதும் படிப்பதுடன், இறுதியில் தங்களது திறமைக்கேற்றவாறு தேர்வை தேர்ந்தெடுத்து அதிக மதிப்பெண்களும் பெற இயலும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கணிதம்-அடிப்படை தேர்வு எளிதாகவும், கணிதம்-உயர்தரம் தேர்வு சிறிது கடினமாகவும் இருக்கும். கணிதத்தில் உயர்கல்வி பயில விரும்பாத மாணவர்கள் அடிப்படை கணிதத் தேர்வை தேர்ந்தெடுத்து அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் இம்முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post