பிளஸ் 1 சேர்க்கை - கல்வியாளர்கள் ஆலோசனை
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பிளஸ் ஒன் சேர உள்ள மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை அம்சங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

பத்தாம் வகுப்பு முடித்த நிலையில், அவரவர் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, பிளஸ் 1 பாட பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, கணிதம், அறிவியல் பாட பிரிவும், அதையடுத்து, அறிவியல், வணிக கணிதம், வணிகவியல், பொருளியல், வரலாறு போன்ற படிப்புகளிலும் மாணவர்கள் சேர முடியும்.

இவற்றில், மாணவர்கள் சேரும் முன், கல்லூரிகளில் எந்த விதமான படிப்பை தேர்வு செய்ய போகிறோம், வரும் காலத்தில் எந்த துறையில் பணியாற்ற விருப்பம் உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப பிளஸ் 1 பாட பிரிவுகளை தேர்ந்து எடுக்க வேண்டும்.

பிளஸ் ஒன்னில் அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்து விட்டு, கல்லூரியில் பி.காம்., படிக்க முயற்சிப்பது நல்லதல்ல.

அதேபோல, இன்ஜினியரிங், மருத்துவம், சி.ஏ., படிக்க எந்த பாட பிரிவை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

மதிப்பெண் குறைவாக இருந்தாலோ அல்லது பிளஸ் 1 படிக்க விருப்பமில்லை என்றாலோ, டிப்ளமா படிப்பில் சேரலாம்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்பவர்கள், கல்வி உதவி தொகை, சலுகை கட்டணத்தையும் பெற முடியும்.

மூன்றாண்டு டிப்ளமா படிப்பை முடித்த பின், நேரடியாக இன்ஜினியரிங் படிப்பில், இரண்டாம் ஆண்டில் சேர்வதற்கும் வழிவகை இருக்கிறது.

மேலும், டிப்ளமா படிப்பை முடித்த பின், தொழிற்சாலை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றியபடியே, பகுதி நேர, பி.இ., - பி.டெக்., படிப்பிலும் சேரலாம்.

இந்த வாய்ப்புகளை முழுமையாக ஆய்வு செய்து, மாணவர்கள் தங்களுக்கான பாட பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில், எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், தங்களால் எதை படிக்க முடியும், எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை, முடிவு செய்து, அதற்கேற்ப பாட பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மருத்துவ படிப்புக்கு விருப்பம் இருந்தால், 'நீட்' தேர்வை எழுத, பிளஸ் 1ல் இருந்தே தயாராக வேண்டியது முக்கியம்.

அதே போன்று ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்றால், அதற்கு, ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கும் இப்போதே முடிவு செய்து, பாடப்பிரிவை தேர்வு செய்யலாம்.

தொழிற்கல்வி பாட பிரிவு எடுத்தால், பிளஸ் 2வுக்கு பின், பொறியியலில் சில பாடப்பிரிவுகள் மட்டுமே படிக்க முடியும். அதுகுறித்தும், மாணவர்கள் தெரிந்து கொள்வது நல்லது.

முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விடும் என்பதற்கு ஏற்ப, பிளஸ் ஒன் படிப்பில் சேரும் மாணவர்கள் தவறாக பாடப்பிரிவை தேர்வு செய்துவிட்டால், திசை மாறிய பயணம் போல் ஆகி விடும்.

எனவே மாணவர்கள் தங்களது விருப்பம், பொருளாதார நிலைமை, திறமை போன்றவற்றை மதீப்பீடு செய்து பிளஸ் ஒன் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post