வரும் மாதங்களில் தமிழகத்தில் வெயில் கொளுத்தும் : வானிலை மையம் எச்சரிக்கை | In the coming months, the sun will rain - Weather Center Warning





தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து மார்ச் மாதம் முதல் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் கொளுத்தும். நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சராசரியாக வெப்பத்தின் அளவு 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோடை மழை தொடங்குவதற்கான காலம் ஏப்ரல் இறுதிவரை ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் தென் மாநிலங்களை விட அதிக அளவு வெப்பம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் பலவற்றிலும் வெப்பம் இப்போதே அதிகரிக்க தொடங்கியுள்ளது. வழக்கமாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தவிர கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்கள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வெப்பத்தின் தாக்கத்தை உணர தொடங்கினர்.
குமரியில் கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் வரலாற்று பதிவாக வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியிருந்தது. இப்போது இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சாதாரணமாக அனுபவிக்க தொடங்கியுள்ளனர். வழக்கமாக மே மாதமே இந்த அளவு வெப்பம் இருக்கின்ற நிலை மாறி மார்ச் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்துள்ளதும், இரவு நேரங்களிலும் வெப்பம் தகிப்பதும் மக்களை கடுமையாக வாட்டத்தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் ஓகி புயல் வேளையில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. பல ஆயிரக்கணக்கான மரங்கள் மீண்டும் வளர்த்தெடுக்கும் நிலையில் இருந்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பசுமை போர்த்திய நிலையில் காணப்பட்ட பகுதிகள் வெட்ட வெளியாக மாறியுள்ளதும், கடல் வெப்பநிலை அதிகரித்து வருவதும் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் தொடக்கத்திலேயே அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post