தவறான தகவல் தந்தால் நடவடிக்கை: வருமான வரித் துறை


வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க, வருமானத்தை குறைத்து அல்லது பிடித்தங்களை உயர்த்தி காட்டும், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'என, வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் செயல்படும், ஒரு தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனத்தின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க, வருமானத்தை குறைத்தும், விலக்குகள் மற்றும் பிடித்தங்களை அதிகரித்து, கணக்குதாக்கல் செய்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது; அவர்களுக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரில் இயங்கும், வருமான வரித் துறையின், மத்திய செயலாக்க மையம், ஒரு ஆலோசனை குறிப்பை நேற்று வெளியிட்டது; அதில் கூறியிருப்பதாவது:வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், சட்டவிரோதமாக, வருமானத்தை குறைத்தும், பிடித்தங்கள் மற்றும் விலக்குகளை அதிகரித்தும் காட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு உத்தரவிடப்படும்.அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர். இத்தகைய தவறை செய்திருந்தால், பணியாளர் நடத்தை விதிகளின் கீழ், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, 'விஜிலென்ஸ்' பிரிவுக்கு பரிந்துரைக்கப்படும்.

தவறான தகவல் தந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அது, வருமான வரி சட்டப் பிரிவுகளின் கீழ், தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதுடன், அவர்களுக்கு திரும்பக் கிடைக்க வேண்டிய பணப் பயன்கள் தாமதமாகும்.வருமான வரி படிவங்களில் பொய்யான தகவல்களை தர உதவும், வரி ஆலோசகர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறைக்கு பரிந்துரைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post