அன்பான ஆசிரியர்களே !. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com

Oct 31, 2018

vinotha

'தீபாவளி தித்திக்க வேண்டுமா? - கட்டுரை!

'தீபாவளி தித்திக்க வேண்டுமா? - கட்டுரை!

 தீபாவளி  தித்திக்க!... 

முனைவர் மணி.கணேசன்

          தீப ஒளி வழிபாடு தொன்றுதொட்டு தமிழ்ச்சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருக்கார்த்திகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படுவதை அகநானூற்றுப் பாடலான, மதி நிறைந்து அறுமீன் சேறும் அகல் இருள் நடு நாள்மறுகு விளக்குறுத்து...என்னும் பாடல்வழி அறியலாம். அதன்பின் தோற்றுவிக்கப்பட்ட நரகாசுர வதம் குறித்த புராணப் புனைவுகள் வெகுமக்களால் நம்பப்பட்டு இன்றளவும் புத்தாடை, பட்டாசு மற்றும் பலகாரங்கள் உள்ளிட்ட இத்யாதிகளுடன் பெரும் பண்டிகையாகக் கொண்டாடி வருவதைக் காணலாம்.
          பெரும்பாலும் பண்டிகைகள் மற்றும் விழாக்கள் ஆகியவற்றின் அடிப்படை வெற்றுக் கொண்டாட்டம் அல்ல. வாழ்த்துதல், நன்றி கூறுதல், உதவி புரிதல், ஆசி பெறுதல் மற்றும் ஆனந்தம் அடைதல் போன்றவற்றை உள்ளடக்கியதாகக் காணப்படும். வீடு முழுவதும் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளியானது இருளைப் போக்கி நற்பலனைத் தரும் என்பது எல்லோரின்  நம்பிக்கையாகும்.
          அண்மைக்காலத்தில் காசைக் கரியாக்குவதுதான் தீபாவளி என்கிற தவறான கருத்து மக்களிடையே மலிந்து வருவதை அறிய முடிகிறது. தேவைக்கு மிஞ்சிப் புத்தாடைகள் குடும்பத்தினர் அனைவருக்கும் எடுப்பதை நடுத்தர வர்க்கத்திடம் வழக்கமாகி உள்ளது. அடித்தட்டு மக்களிடையே இத்தகைய நோக்கும் போக்கும் மனதளவில் பெரிய வலியை உண்டுபண்ணி விடுவது நடப்பாக இருக்கிறது. புத்தாடைகள் வாங்கி உடுத்த வழியின்றித் தவிக்கும் ஏழை எளியோரின் வாழ்வில் வசந்தத்தைத் தோற்றுவிக்க இயன்றவர்கள் உதவிடும் நற்சிந்தனையும் நல்ல பண்பும் உருவாதலும் உருவாக்குதலும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. இதன்மூலம் குடும்பத்தில் ஏற்படும் வீணான செலவுகள் குறையும். மட்டுமின்றி ஆடம்பரமும் ஒழியும்.
         
          பட்டாசுகள் பெருமளவு வெடிப்பதன்  காரணமாக மாசடைந்து வரும் சுற்றுச்சூழல் ஒலி மற்றும் காற்று மாசிலிருந்து விடுபடும். பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கப்படும் சின்னஞ்சிறு பறவை இனங்களைக் காக்க வழிகோலும். இதுதவிர, வெடியாலும் வெடி மருந்துகளாலும் சக மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக்கொள்ள இயலும். கூந்தன்குளம் உள்ளிட்ட சில தமிழக கிராமங்களில் காற்றில் கந்தக நெடியினையும் பேரொலி மாசுபாடுகளையும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் பன்னெடுங்காலமாகத் தவிர்த்துஉலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
          மேலும், பட்டாசுகளால் பெற்றோரிடையே தம் பிள்ளைகள் எதிர்நோக்கவிருக்கும் தீ சம்பந்தப்பட்ட ஆபத்துகள் குறித்த அச்சம் மற்றும் அலைக்கழிப்புகள் ஆண்டுதோறும் அவர்களுடைய மனத்தில் எழுவது வாடிக்கையாக உள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது. பட்டாசுகள் மீதான சிறுவர், சிறுமிகளிடம் காணப்படும் மோகத்தினைத் தணித்து அதிகம் ஒலியெழுப்பாத, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வெடிப்பொருள்களை உற்பத்தி செய்வதும் பயன்படுத்துவதும் அவசர அவசியத் தேவைகளாக இருக்கின்றன.
          இதுதவிர, தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பெற்றோர்கள், பெரியோர்கள்உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்திப்பும் வாழ்த்தும் என்றென்றும் நீடித்து நிலைத்து வந்துள்ளன. நேரில் சந்தித்து வாழ்த்துவதும் வாழ்த்தப்பெறுவதும் மனித உறவுகளைப் பேணி வளர்க்கும் காரணிகளாவன. திறன்மிகு கைபேசிகளின் வரவால் குரல்வழியாக அன்றி முகநூல், பகிரி (வாட்ஸ் அப்) மற்றும் கீச்சகம் (டுவிட்டர்) போன்றவற்றின் மூலமாக வாழ்த்துச் செய்திகளாகவோ, காட்சிப் படமாகவோ ஒப்புக்குச் செய்யும் சடங்காக அண்மைக்காலத்தில் மாறிவருவது கவலையளிப்பதாக உள்ளது.
                    உண்மையில் நிறைய பேர் தமக்கு வந்து குவியும் இதுபோன்ற தகவல்களைச் சரிவர பார்க்கபதிலளிக்கக்கூட பிடிக்காமல் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒருவிரல் தொடலில் அழித்துவிடும் அவலம் மலிந்து வருவது மறுப்பதற்கில்லை.ஆண்ட்ராய்ட் வரவால் குடும்ப உறுப்பினர்களிடையே குதூகலம்,கருத்துப் பகிர்வுகள், பாசப் பிணைப்புகள், கொண்டாட்டக் களிப்புகள், உவகைகள், வேடிக்கை விளையாட்டுகள் முதலியன மங்கி மறைந்து வருவது வருந்தத்தக்கதாகும்.
          பொருள்சூழ் உலகில் வாழும் மனித இனம் மூச்சு விடும் எந்திரங்கள் அல்லஉயிரும் உணர்வும் ஒருங்கே பெற்ற ஆறறிவு கொண்ட பேருயிர்கள். அவை ஆனந்தமும் அமைதியும் நல்லிணக்கமும் நன்னடத்தையும் அடைந்திட தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளும் பெருவிழாக்களும் தமிழர் பண்பாட்டில் வாழ்வியல் கூறுகளாக அமையப் பெற்றுள்ளன. மேலும், அவற்றின் அடித்தளமாக அன்பே நிறைந்து காணப்படுகிறது. அன்பே அனைத்திற்கும் அடிப்படை. இயந்திரங்களால் இயலாது அன்பை விதைக்கவும் வளர்க்கவும். இதயங்களால் மட்டுமே முடியும். இனிமேல் தீபாவளி உள்ளிட்ட எந்தப் பண்டிகையையும் ஏழை எளியோரின் துயர்களைப் போக்குதல், சுற்றுச்சூழல் மாசுபடாது காத்தல், பெரியோர்களுக்கு மதிப்பளித்தல் மற்றும் மனித உறவுகளை உளமாரப் பேணி வளர்த்தல் எனக் கொண்டாடப் பழ(க்)குவோம்.

முனைவர் மணி.கணேசன்
ராஜீவ்காந்தி நகர்
மன்னார்குடி - 614001
9442965431

vinotha

About vinotha -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Thanks for your comment