அன்பான ஆசிரியர்களே !. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com

Oct 2, 2018

vinotha

உங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா? விகடன் சர்வே முடிவுகள்!

உங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா? விகடன் சர்வே முடிவுகள்!விகடன் இணையத்தளத்தில் , பெற்றோர்களிடம் உங்கள் பிள்ளையை எந்தப் பள்ளியில் சேர்க்கவிருக்கிறீர்கள் என்று ஒரு சர்வே நடத்தினோம் .


அதில் , அரசு அல்லது தனியார் பள்ளியை நிராகரித்ததற்கு என்ன காரணம் , அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் சீர் செய்ய வேண்டிய விஷயங்கள் எவை என்பது உட்பட ஆறு கேள்விகளை முன் வைத்திருந்தோம் . அதற்கு மிகுந்த ஆர்வத்துடன் பலரும் பங்கேற்றிருந்தனர் . அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி .

அரசுப் பள்ளி

இந்த சர்வே முடிவுகள் குறித்து , கல்வி மேம்பாட்டுக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு .மூர்த்தியின் கருத்துகளைக் கேட்டோம் .சு.மூர்த்தி பொதுமக்கள் இந்த சர்வேயில் ஆர்வத்துடன்பங்கேற்றமை முதலில் நன்றிகள் . இதுபோன்ற உரையாடல் வழியேதான் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் . சர்வேயின் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ஆராயாமல் மக்களின் கருத்துகளைத் தொகுத்து , அவை குறித்து என் பார்வையைப் பதிவு செய்ய விரும்புகிறேன் .அரசுப்பள்ளிகள் பொதுமக்கள் பலரால் புறக்கணிக்கப்படும் நிலை உருவாக வழிவகுத்தவர்கள் ஆட்சியாளர்கள்தான் . தனியார் பள்ளிகள் பெருக வாய்ப்பளித்தது மட்டுமல்லாமல் அரசுப்பள்ளிகள் சீர்கேடடையவும் வழி வகுத்தார்கள் . ஏற்கனவே இருந்த ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை நலிவடைய வைத்தார்கள். மாவட்டத்திற்கு ஒரு மாதிரிப்பள்ளிகள் திறக்க திட்டம் வகுத்தார்கள் . 1966 ஆம் ஆண்டிலேயே கோத்தாரிக் கல்விக்குழு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கல்விக்கு 6% நிதி ஒதுக்கப் பரிந்துரைத்தது . இதுவரை ஒரு நிதி நிலை அறிக்கையில் இது நடக்கவில்லை . கடந்த ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தற்போது ஆட்சியில் இருக்கும் பா .ஜ .க அரசும் 6% கல்விக்கு நிதி ஒதுக்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். ஆனால் செய்யவில்லை . அரசாங்கத்தின் கல்விக் கடமை அரிமா சங்கத்தின் நற்பணியைப் போல மாற்றிக்கொண்டார்கள் . வரிப்பணம் செலுத்தும் மக்களுக்குக் கல்வி உரிமை எதுவெனத் தெரியாமல் போனதால் தான் இந்தக் கொடுமைகள் நடந்தன . நடந்துகொண்டும் இருக்கின்றன .இருட்டு ஒரு பக்கம் தெரிந்தாலும் இன்னொரு பக்கம் வெளிச்சமும் தெரிகிறது .

இன்றும்கூட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முயற்சியால் சில அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளைத் தோற்கடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்பதைப் பார்க்கிறோம் . ஊர் மக்கள் , சமூக ஆர்வலர்கள் சிலரின்முயற்சியால் சில அரசுப்பள்ளிகள் முன்மாதிரிப்பள்ளிகளாக மாற்றம் அடைந்துள்ளன . சமூக மாற்றம் குறித்த அக்கறைகொண்ட சிலர் அரசுப்பள்ளிகளில் படிக்க வைப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள் . எங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்கிறோம் , அதுவும் தாய்மொழியாம் தமிழ் மொழியில் படிக்க வைக்கிறோம் என்று பெருமையோடு வெளியில் பேசுகிறார்கள் .தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்களில் கணிசமான எண்ணிக்கையினர் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கடமையுணர்வின் மீது நம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பெரும்பான்மையினர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிக்கு அனுப்புவது இப்படியான அவநம்பிக்கை ஏற்பட வழிவகுக்கிறது . இதைச் சரிசெய்யவேண்டிய பொறுப்பு அரசை மட்டும் சார்ந்ததல்ல. பெற்றோர்களையும் சமூகத்தையும் சார்ந்தது . பெற்றோர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நண்பர்களாகவும் , ஆலோசகர்களாகவும் அதேசமயம் கண்காணிப்பாளர்களாகவும் இருக்கவேண்டும் . பெற்றோர் ஆசிரியர் உறவு பேணப்படுவது அவசியமானது . கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழுக்கள் ஏட்டுச் செயல்பாட்டில் மட்டும் உள்ளன . பெற்றோர்கள் மட்டுமே பெரும்பான்மையினர் இக்குழுவில் இடம்பெற முடியும் . இக்குழுக்களை ஒவ்வொரு பள்ளியிலும் உயிர்ப்புடன் செயல்பட வைக்கவேண்டும் .

அரசுப் பள்ளி

ஆங்கிலவழிக் கல்வி மோகத்தால் பெரும்பான்மையினர் தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் . ஆங்கில மொழி கற்றல் குறித்த , கல்விப் பயிற்று மொழி குறித்த தவறான எண்ணங்களே இதற்குக் காரணம் . இந்தத் தவறான எண்ணங்கள் தனியார் பள்ளிகளால் விதைக்கப்பட்டவை . இன்று தனியார் பள்ளிகளிலும் , அரசுப்பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் 90% அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள் . ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக மட்டுமே படித்தவர்கள் . ஆங்கில வழியில் கற்பிக்கும் அளவிற்கு ஆங்கில மொழிப் புலமை அற்றவர்கள் . ஆங்கிலக் குருட்டு மனப்பாடக் கல்விக்கு உதவி செய்பவர்களாக மட்டுமே இவர்கள் இருக்க முடியும் . இதனைப் புரிந்துகொண்டுள்ள கல்வி விழிப்புணர்வுள்ள பெற்றோர்கள் சிலர் தனியார் பள்ளியில் சேர்த்தாலும் தமிழ் வழியில் தான் சேர்க்கிறார்கள் .அரசுப்பள்ளிகளைத் தக்கவைப்பது அரசின் இலவசத் திட்டங்களால் சாத்தியப்படும் ஒன்றல்ல . கல்வியைக் குறுகிய கால நுகர்வுப்பண்டமாக மக்கள் கருதவில்லை .

தங்கள் வாரிசுகளின் ஒளிமயமான எதிர்காலமாகக் கருதுகிறார்கள் . ஓட்டை , உடைசல் இல்லாத கல்வியும் பள்ளியும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் . நல்ல கல்வி வாய்ப்புகளைக் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்க பொருளாதார சுமைகளையும் தாங்குகிறார்கள் . அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை , சுகாதாரமான கழிப்பறையின்மை , நல்ல குடிநீர் வசதியின்மை ஆகிய தீர்க்கப்படாத குறைபாடுகள் வசதி படைத்த பெற்றோர்கள் தனியார் பள்ளிக்குச் செல்ல வழி வகுக்கிறது . தனியார் பள்ளிக்கு அனுப்ப வசதிவாய்ப்பு இல்லாத பெற்றோர்கள் அரசுப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள் . வசதியில்லாதவர் அதிகம் வசிக்கும் ஊர்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் மட்டும் குழந்தைகள் இருக்கிறார்கள் . ஏழைகள் இல்லை என்றால் அரசுப்பள்ளிகள் இருக்காது என்பது தான் எதார்த்த உண்மை .

இது மிகப்பெரிய கொடுமை அல்லவா ? அரசு கல்விக்கடமைகளில் இருந்து பின்வாங்கியது தான் இந்தக் கொடுமைக்குக் காரணம் . நாங்கள் வரி செலுத்துகிறோம் , கல்வி வரி உள்ளிட்ட வரிகளை வசூலிக்கும் அரசு , நாட்டில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான , சமவாய்ப்பிலான , அவரவர் தாய்மொழி வழியிலான கல்வியைக்கொடுக்க மறுப்பது என்ன நியாயம் ? என்று மக்கள் கேள்வி கேட்கும் நிலை வரவேண்டும் . வசதி படைத்தவர்கள் , நடுத்தர வர்க்கத்தினர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதே தீர்வு என்று நினைத்து பொருளாதார சுமைகளுக்கு ஆளாவது ஒரு அறியாமையே . எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது இது தான் . அரசை கல்விக் கடமைகளை சரியாகச் செய்ய வைக்க முயற்சி எடுக்கவேண்டும் ." என்கிறார்.

vinotha

About vinotha -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Thanks for your comment