TNPSC - குரூப் 2 தேர்வில் பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களை அனுமதிக்கக் கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்





தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்குரூப் 2 தேர்வுகளுக்கு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களையும் அனுமதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட குருப் 2 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, சென்னை சூளைமேட்டை சேர்ந்த இளையபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் மனுவில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்1 தேர்வுகளுக்கும் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட குரூப் 2 தேர்வுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே பங்குபெறமுடியும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணை விதிகளுக்கு முரணானது. எனவே, இந்த அறிவிப்பாணை யை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இறுதி ஆண்டு பட்டப்படிப்பு  மாணவர்களும் குருப் 2 தேர்வில் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 23ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக துறை செயலாளர் மற்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளருக்கு  உத்தரவிட்டனர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post