நவம்பர் 6ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு... வானிலை மையம்



தமிழகம், மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு-
சென்னை : தமிழகம், மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 6ம் தேதியை ஒட்டி வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
chennai meteorological department predicts tn will get heavy rain for the next 2 days
பருவமழை தொடக்கமே மழை பிச்சு வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கடலோர தமிழகம் தெற்கு உள் தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவில் துவங்கிய வடகிழக்கு பருவமழை இன்று தமிழகத்தின் இதர பகுதிகள் மற்றும் தமிழகத்தை ஒட்டி உள்ள தெற்கு கர்நாடகா ராயலசீமா மற்றும் கேரளாவிலும் துவங்கியுள்ளது.
வளிமண்டல மேல் அடுக்கில் சுழற்சி நிலவுகிறது, தமிழகம் மற்றும் குமரி பகுதியில் இந்த சுழற்சியானது நிலவுவதால் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும். சென்னையை பொருத்தவரையில் வரும் 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.
அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. வரும் நவ.6ம் தேதியை ஒட்டி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. மிகக் குறைந்த காற்றழுத்தமாகவே தற்போது காணப்படும் நிலையில் அதன் நகர்வு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுமா என்பது தெரிய வரும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேதாரண்யம் 15 சென்டிமீட்டர், நாகப்பட்டினம் 14 சென்டிமீட்டர், திருத்துறைப்பூண்டி 13 சென்டிமீட்டர், மயிலாடுதுறை 9 சென்டிமீட்டர், திருவாரூர், காரைக்கால், நன்னிலம், ராமேஸ்வரம், பரங்கிப்பேட்டை 7 சென்டி மீட்டர் மற்றும் பாம்பன் மதுக்கூரிலும் மழை பெய்துள்ளது என்று அவர் கூறினார்

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post