அசல் சான்றிதழை வாங்கி வைக்க கல்லுாரி, பல்கலைகளுக்கு தடை
மாணவர்களின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ள, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது.
கல்லுாரிகள் மற்றும் பல்கலை களில் இருந்து, வேறு கல்லுாரிக்கு மாறும் மாணவர்களுக்கு, உரிய அசல் சான்றிதழ்களை தருவதில்லை என்றும், முழுமையாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்குவதில்லை என்றும், புகார்கள் எழுந்துள்ளன.இதையடுத்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., தரப்பில், புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, யு.ஜி.சி.,யின் செயலர், ரஜினிஷ் ஜெயின் கூறியிருப்பதாவது:
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இருந்து, வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாறும் மாணவர்களுக்கு, அவர்களுக்கு சேர வேண்டிய கட்டணத்தை, உடனடியாக வழங்க வேண்டும். கட்டணத்தை தராமல் இழுத்தடிக்க கூடாது.அதேபோல, மாணவர் சேர்க்கையின் போது, சான்றிதழ்களை வாங்கி ஆய்வு செய்து, மீண்டும் அவர்களிடம் வழங்கி விடவேண்டும்.
தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன், மாணவர் களின் சுய கையொப்பம் மற்றும் உறுதி கடிதம், பெற்று கொள்ள வேண்டும். மாணவர்களின் அசல் சான்றிதழ்கள், பள்ளி படிப்புக்கான சான்றிதழ்களை வாங்கி வைத்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது, அங்கீகாரம் ரத்து உட்பட, பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
0 Comments
Thanks for your comment