ஆதார் மட்டும் ஆவணம்: கேட்டால் அபராதம்


வங்கி கணக்கு துவங்குவதற்கோ அல்லது மொபைல் போன் சேவை பெறுவதற்கோ ஆதாரை மட்டும் முக்கிய ஆவணமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வங்கி சேவைகள், தொலை தொடர்பு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கூறி இருந்தது. ஆதாரை அரசின் பொதுநல திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன் காரணமாக ஆதார் கட்டாயமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது. என்றாலும் மொபைல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகளுக்கு தொடர்ந்து ஆதார் எண்கள் விபரம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து மொபைல்போன் சேவை, வங்கி கணக்குகள் தொடங்க ரேசன் கார்டு அல்லது பாஸ்போர்ட் இருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன. இதையடுத்து இதை ஒழுங்குப்படுத்துவதற்காக நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி மொபைல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விதிகளை மீறும் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த முடிவுகள் அனைத்தும் விரைவில் சட்டதிருத்தமாக கொண்டுவரப்பட உள்ளன. ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post