ஆன்லைனில் பி.எப்., கணக்கு: உறுப்பினர்கள் கவனம் தேவை



''பி.எப்., நிறுவனத்தின்சேவை, இணைய வழியில்மாறுவதால், சுய விபரங்களை, சந்தாதாரர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்,''
என, சென்னை, புதுச்சேரி மண்டல கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி கமிஷனர், கி.வே. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:இ.பி.எப்., என்னும், வருங்கால வைப்பு நிதிக் கணக்குகள் அனைத்தும், 'ஆன்லைன்' எனும், இணைய வழி சேவைக்கு மாற்றப்படுகின்றன.பி.எப்., கணக்கு வைத்துள்ள ஓய்வூதியர், தொழிலதிபர் மற்றும் உறுப்பினர்களுக்கு, எளிமையான சேவை புரியும் வகையிலும், காகிதமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், இந்த முறை பின்பற்றப்படுகிறது.இந்த சேவையை பெற, ஊழியர்கள், தங்களின், யூ.ஏ.என்., என்னும், யுனிவர்சல் கணக்கு எண்ணை, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.அதற்கு, உறுப்பினரின்பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் உள்ளிட்ட அடிப்படை விபரங்களை வழங்க வேண்டும். பின், மொபைல் எண்ணில், ஓ.டி.பி., எனும், ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை தேர்வு செய்ய வேண்டும்.சுய விபரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால், இணையவழி சேவையை பெறுவதில் சிரமம் ஏற்படும்.

இணையவழி சேவைகளை முழுமையாக பெற, தங்களை பற்றிய, உண்மையான விபரங்களை, முழுமையாக தெரிவிப்பதுடன், அவை, சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்து, ஒப்புதல் அளிக்க வேண்டும்.பணியாளர்கள், தங்களின் மொபைல் எண்ணுடன் மட்டுமே, ஒருங்கிணைந்த கணக்கு எண் என்ற, கே.ஒய்.சி., விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணை, வேறு எந்த, யூ.ஏ.என்., உடனோ, மற்ற உறுப்பினர்களுக்கோ இணைக்கக் கூடாது.யூ.ஏ.என்., பயன்பாட்டிற்கு தேர்வு செய்துள்ள, 'பாஸ்வேர்டு' எனும் கடவுச்சொல்லையோ, பி.எப்., கணக்கு விபரங்களையோ, பி.எப்., நிறுவனம் கேட்காது.எனவே, பி.எப்., நிறுவனத்தின் பெயரில், வேறு யாராவது தொலைபேசி மற்றும் மின்னஞ்சல்வழியாக, கணக்கு விபரங்களை கேட்டால், தெரிவிக்க கூடாது.ஒரு வங்கிக் கணக்கு, சம்பந்தப்பட்ட பணியாளரின், பி.எப்., கணக்கோடு மட்டுமே இணைக்கப்பட வேண்டும். வேறு எந்த, பி.எப்., கணக்குக்கும், வங்கிக் கணக்கை இணைப்பது குற்றம்.அவ்வாறு செய்தால், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதுடன், சேவைகள் தாமதமாகவோ, ரத்தாகவோ வாய்ப்பு ஏற்படும். எனவே, விபரங்களை பதிவு செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post