2018-2019 ஆண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதில் அதிகப்படியாக பள்ளிக்கல்வித் துறைக்கு 2018-2019 ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் 27,205.88 கோடி ரூபாயும், உயர்கல்வித் துறைக்காக ரூ.4,620.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2018-19 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
பள்ளிக் கல்வி:
- வரும் கல்வி ஆண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
- பள்ளிக்குச் செல்லாத 33,519 குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டு தமிழக பாடத்திட்டத்திலும் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
- நபார்டு வங்கியின் உதவியுடன் ரூ.200 கோடி செலவில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
- 2018-2019 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.333.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 2017-18ம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளால் ரூ.54.50 கோடி பள்ளிகளில் கழிவறைகளைத் தூய்மையாக பராமரிக்க வழங்கப்பட்டுள்ளது, இத்திட்டம் வரும் ஆண்டும் தொடர்ந்து செயல்படும்.
- தரமான கல்வியை வழங்குவதற்காக மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சீருடை, புத்தகம், மிதிவண்டி, இலவச பேருந்து சீட்டு ஆகிய நலத்திட்டங்களுக்காக ரூ.1,653.89 கோடி 2018-19 ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது, இத்திட்டத்திற்காக ரூ.313.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழுங்கும் திட்டத்திற்காக ரூ.758 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக ரூ.1,750 கோடியும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்திற்காக ரூ.850 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை செயற்படுத்திட ரூ.200.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சத்துணவு திட்டத்திற்கு ரூ.5,611 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வி:
- கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியின் விக்டோரிய விடுதி மற்றும் ராணி மேரிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் பாரம்பரியமிக்க கட்டடங்கள் 26 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
- முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.682.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நல்கை தொகை புதிய கணக்கீட்டின்படி மாற்றியமைக்கப்படும்.
- அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு மானியமாக ரூ.250 கோடி வழங்கப்படும்.
- அண்ணாமலை பல்கலைக்கழகம் உட்பட அனைத்துப் பல்கலைக்கழகளுக்கும் மானியமாக வழங்குவதற்கு 500.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி உதவித் தொகையாக ரூ.129.16 கோடியும், உயர்கல்வி உதவித் தொகையாக ரூ.1,838.24 கோடி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.
0 Comments
Thanks for your comment