அன்பான ஆசிரியர்களே !. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com

Mar 5, 2018

REMO RK

எனக்கு படிப்பு வராது என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது

எனக்கு படிப்பு வராது என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது? | How can I teach lessons to children who do not want to study?





குழந்தைகளுக்கு பாடங்களைப் பல விதங்களில் சொல்லித் தர முடியும். அதைச் சுவாரஸ்யமாக்கினால் புரிந்து கொள்வது எளிதாகும்.

இப்படிச் செய்ய ஒரு விதம், 'ரெஸிப்ரோகல் லர்னிங்’ (Reciprocal Learning) என்ற முறையாகும். இந்த முறையை உபயோகிப்படுத்துகையில் பாடத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் படிக்கும் திறன் மேம்படும். இதைப் பல ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

படிக்கத் திணறும் மாணவர்களுக்கும், பாடத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட, பாடத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவிய முறைகளைப் பற்றி பல தகவல்கள் உள்ளன. குறிப்பாக, வகுப்பில் ஒரு இடத்தில் உட்கார முடியாமல் கவனம் இங்கும் அங்கும் சிதறி அலைந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, வகுப்புகளில் அவர்களின் முழுக் கவனம் கூடிய பங்கேற்பும், பாடத்தைப் புரிந்து கொள்ள மேம்படுத்துவதிலும் அத்தகைய முறைகள் உதவும்.

'ரெஸிப்ரோகல் லர்னிங்’ என்ற இந்த முறையை ஆசிரியர் ஒருவர் கற்றுத் தர, மாணவர்கள் தானாகவே கற்றுக் கொள்ளுவதற்கு உதவும் ஒரு முறையாகும். இது எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம்.

'ரெஸிப்ரோகல் லர்னிங்’ என்ற முறையை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆசிரியர். அவர் பெயர் பாலின்க்ஸர், மற்றொருவர் ஆன் ப்ரெளன் என்ற ஒரு உளவியலாளர். 1984-ம் ஆண்டில் இவர்கள் இணைந்து இந்த முறைக்கு ஒரு  வடிவம் கொடுத்தார்கள். அதன்பின்னர், மாணவர்களிடம் பாடத்தை படிப்பதிலும் புரிந்து கொள்வதிலும் பல வித்தியாசங்களைக் கவனித்தார்கள்.

இம்முறையில் படித்த மாணவர்கள், புரிந்து கொண்டதிலும், புரிந்து கொள்ளும் விதங்களிலும், பலவிதமான வேறுபாடுகள் தெரிந்தன. சரியாகப் புரியாத மாணவர்களுக்குப் பாடத்தின் மீது வெறுப்பு தட்டியது, மதிப்பெண் குறைந்தது, 'எனக்குப் படிப்பு வராது’ என்ற முடிவை மாணவர்கள் எடுத்தார்கள்.

பாலின்க்ஸர், ப்ரெளன் இருவரும் இதைச் சரி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வழிகளைத் தேட ஆரம்பித்தார்கள். அப்பொழுதுதான் அவர்கள் 'உரையாடல்’ மூலம் பாடத்தை கற்றுத் தரலாம் என்பதை உணர்ந்தார்கள். உரையாடல் மாணவர்களுக்கு எப்படியும் பரிச்சயம், பெரும்பாலானோர்க்குப் பிடிக்கும்  என்பதாலேயே இதைத் தேர்ந்தெடுத்தார்கள்.

உரையாடலின் வழியாகப் பாடத்தை ஒருவருக்கு இன்னொருவர் விவரிக்க முடியும். அதாவது, உரையாடுவதின் மூலம் ஒவ்வொருவரின் மூலம் மற்ற அனைவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொருவரையும் பங்கேற்ற வைப்பதால், இதற்கு 'ரெஸிப்ரோகல் லர்னிங்’ என்ற பெயரை சூட்டினார்கள். இந்த முறையில் எடுத்துக் கூறுவது மிக முக்கியமான இடம் பெறுவதால், ஒருத்தருக்கு ஒருத்தர் அரவணைத்துக் கொண்டு போவார்கள். இதனால், அன்பு கூடும், உன்னிப்பாகப் படிப்பதால் ஆர்வம் வளரும். படிக்கவும், நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் ஏற்படும்.

ரெஸிப்ரோகல் லர்னிங்’ முறையில், ஒரு 40-50 நிமிட வகுப்பில், ஆசிரியர் ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டு மாணவர்களுடன் இணைந்து அவர்களும் படிக்கலாம். இதைப் புரிந்து கொள்ள, மாணவர்களை 4 பேர் கொண்ட குழுக்களாக அமைத்து, அவர்கள் குழுவில் ஒருவருடன் ஒருவர் உரையாட வைக்க வேண்டும். உதாரணமாக அந்தப் பாடத்தை உரையாடலின் மூலமும் கேள்விகள் மூலம் அக்கு வேறு ஆணி வேராக பிரித்து முழுமையாக புரிந்து படிக்க வேண்டும்.

குழுவில், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பங்குண்டு. முன் இணைப்பவர் என்பவர் இதற்கு முன் வந்த எந்தப் பாடங்கள் இத்துடன் இணைகிறது என்பதை நினைவூட்டுவார்கள். கேள்வி கேட்பவர் என்பவர் பாடத்தையொட்டி வெவ்வேறு கேள்விகளை எழுப்புவார். தெளிவு படுத்துபவர் என்பவர் தனக்குப் புரிந்த அளவிற்குப் பாடத்தை விளக்குவார், கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். சுருக்கிக் கூறுபவர் என்பவர் இறுதியில் தமக்குப் புரிந்ததை சுருக்கமாகச் சொல்வார்.

அதற்காக அந்தப் பணியை அவர்கள் ஒருவர்தான் செய்ய வேண்டும், வரிசையாகத் தான் செய்ய வேண்டும் என்பது கிடையாது.  மற்றவர்களும் புரிந்து கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைக்க வேண்டும். இதில் புரிந்து கொள்வதுதான் முக்கியம், இதுவொரு போட்டி அல்ல! அவரவர் பங்களிப்பைப் புரிந்த் கொண்டு அதற்கேற்றபடி நடக்க வேண்டும் அவ்வளவே! இதன் நோக்கமே, ஒவ்வொருவரும் முனைந்து தன் பங்கை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்பதுதான்.

ஆசிரியர் பாடத்தைப் பொருத்தும், தங்களது அனுபவத்தை வைத்தும் இதில் சில வேறுபாடுகள் கொண்டு வரலாம். எடுக்கப் போகும் பாடத்தை மாணவரை வீட்டில் படித்து வரச் சொல்லலாம், அல்லது, வகுப்பிலேயே குழுவாகப் படித்து உரையாடிப் புரிந்து கொள்ளலாம். முழு வகுப்புடன் பகிர்ந்தும் கொள்ளலாம்.

பாடத்திற்குப் பாடம், குழுக்களையும் மாற்றி அமைக்க வேண்டும். பாடத்தைக் கவனத்துடன் படிக்க, அவர்களுடைய சுய மதிப்பீடும், தன்னம்பிக்கையும் வளரும். இதை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்றும் சொல்லலாம்!!

ஆனால், மாணவர்கள் செய்யத் தொடங்குவதற்கு முன்பு ஆசிரியர் இதன் செய்முறையை அவர்களுடன் செய்து, வழிமுறைகளை நன்கு விளக்க வேண்டும். அவரவர் தன் பங்கைப் பயில ஆசிரியர் வாய்ப்புகளை அமைத்து, மாணவர்களுக்கு வழிகாட்டி வந்தால்தான் அவர்களுக்கு தங்களுக்கு குறிப்பிடப்பட்ட பங்களிப்பைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.  தங்களுக்கு தரப்பட்டுள்ள பொறுப்புகளைக் கவனமாகச் செயல்படுத்தத் தொடங்குவார்கள். அதன்பின்புதான் மாணவர்கள் தானாக செய்யத் தொடங்க வேண்டும்.

இல்லையெனில், குழு அமைத்ததும் சந்தேகங்கள், குழப்பம் முன்னிலையில் நிற்க, பாடத்தின் மீது கவனம் செலுத்தமுடியாது. இதன் விளைவு, மாணவர்கள், குழுவில் பகிர்ந்து கொள்ளுவது என்றாலே அஞ்சி, நடுங்கி விடுவார்கள் இந்த 'ரெஸிப்ரோகல் லர்னிங்' முறையை பயிற்சி கொள்ள, மாணவர்களுக்கு ஒரு பொதுவான பத்தியையோ, பகுதியையோ படிக்கச் சொல்லலாம். பிறகு, குழுவில் அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் பொழுது, கணிப்பவர் செய்ய வேண்டியவை, அதே போல், தெளிவுபடுத்தவரின் பணிகள், கேள்வி கேட்பவர் என்ன செய்ய வேண்டும், சுருக்கிக் கூறுபவர் எப்படிச் செய்ய வேண்டும் என்று மாணவர்களுக்கு உதாரணங்களுடன் முதலிலேயே புரிய வைத்துவிட வேண்டும். குழுக்கள் செயல்படும் பொழுதிலும் ஆசிரியரின் வழிகாட்டுதல் தேவையானதே.

ஆசிரியர், குழுக்களை அமைக்கையில், ஒவ்வொருவரின் பங்கும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பங்களிப்பு அட்டையில் அவர்களுக்குக் குறித்துக் கொடுப்பது நல்லது. பங்கேற்பாளர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்:

முன் இணைப்பவர் (Predictor): இவர்கள் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்னவெனில், ஏற்கனவே படித்த விஷயங்களைப் படிக்கும்போது, தற்போது படிக்கும் பாடத்துடன் இணைத்து மேற்கோள்களுடன் குறிப்பிட வேண்டும்.  ஏற்கனவே படித்து தெரிந்ததை எடுத்துக் கூற வேண்டும். மேலும், படிக்கும் ஒவ்வொன்றையும் மற்ற குறிப்புகளுடன் பொருத்தமாக இணைக்க வேண்டும்.  எப்பொழுதும் பாடத்தில், புதியதொரு விஷயத்தைப் புரிய வைக்க, ஏற்கனவே தெரிந்ததுடன் சேர்த்துக் கொண்டால், புதியதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் இதன் லாஜிக்.

இதைத் தவிர, இவர்கள் இணைப்புகள் எவ்வாறு இருக்கக் கூடும், புதிய பாடம் மேற்கொண்டு எப்படிப் போகும் என்றும் யூகம், அனுமானம் செய்யலாம். கற்பனை, அகக்கண், மனக்கண் உபயோகித்து, பாடத்தைச் சுற்றிய விஷயங்களைப் பற்றி சித்திரிக்கலாம். இதைப் படிக்கும் பொழுது மனதில் என்ன தோன்றியது, கண்களை மூடிக்கொண்டு கேட்டால் என்ன தோன்றியது என்றும் செய்து பார்க்கச் சொல்லலாம்.

அடுத்தக் கட்டம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை ஒரு புதிர் போல அமைத்து உரையாடலாம். பிறகு புதிருக்கு விளக்கமும் அளிக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்வது மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டிவிடும்.

கேள்வி கேட்பவர் (Questioner): பாடத்தை மையமாக வைத்துக் கொண்டு கேள்விகள் கேட்பது இவருடைய பொறுப்பு. இவை நேரடியான கேள்விகளாகவோ, ஆராய வேண்டிய கேள்விகளாகவோ, இல்லை உள்ளர்த்தம் உள்ளதாதவும் இருக்கலாம். தனக்குப் புரியாததை மட்டும் கேட்க வேண்டும் என்று இல்லை, குழுவின் சார்பாகவும் கேள்விகள் எழுப்பலாம்.

ஒவ்வொரு மையக் கருத்திற்கும் ஒரு கேள்வி எழுப்ப வேண்டும். உதாரணக் கேள்விகள்:
. எதைப் பற்றி இந்தப் பாடம் உள்ளது?
……. பற்றி என்ன தெரிகிறது?
...  புரிந்துக் கொள்ள முடியவில்லை?
இதை... எப்படி புரிந்துக் கொள்ள? ஏன் இப்படி?
எங்கு, ஏன், எதனால்….. இது நடந்தது? யார்….?
எதனால்…...முக்கியம்?
எப்படி?….உதாரணங்கள்?
எதை வைத்து ...? இதை….இதையும்… பொருத்துப் பார்க்கப் பட்டதுண்டா?
…..பற்றி உங்களின் கருத்து? அபிப்பிராயம்?
இதை நாம் தெரிந்து கொள்வதின் பயன்கள் ……...?
இதைப் போல் ஏற்கனவே படித்ததில் ஏதாவது கேள்விப்பட்டதுண்டா?
தெளிவுபடுத்துபவர் (Clarifier):  இவர்களுக்கு பாடத்தில் வரும் புதுச் சொற்கள், வார்த்தைகள், கருத்துக்கள் தெளிவுபடுத்தும் பொறுப்பு உண்டு. படிக்கும் பாடத்தில் புரியாத வார்த்தைகளை, வாக்கியங்களை, எழுதிக் கொண்டு அதைத் தெளிவு செய்ய வேண்டியது இவர்களுடைய முக்கிய பொறுப்பாகும். இவர்கள் குழுவில் எழும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும், உதாரணத்திற்கு:

------ என்றால் என்ன?
இந்தக் கருத்து புரியவில்லை, அது இடம் பெறுவது, பக்கம் …...யில். இதன் அர்த்தம்….
குழப்பம் அடைந்த பகுதி….இது. அதைப்பற்றி இவ்வாறு யோசித்துப் புரிந்து கொள்ளலாம்... புரிய வைக்கும் பொறுப்பும் இதில் அடங்கும்.
இவையெல்லாம் விளக்கம் பெற செய்ய வேண்டியவை 1….2….3….4….
(முன்பு கூறியபடி, தெளிவுபடுத்த மற்றவரும் உதவலாம்).

சுருக்கிக் கூறுபவர் (Summariser):  மையக் கருத்துக்களை மொத்தமாகவும் சுருக்கமாகவும் எடுத்துக் கூறுவது இவர் பொறுப்பு. தன்னுடைய சொந்த வார்த்தைகளில் பாடத்தில் சொல்லப்படும் முக்கியமான கருத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.

படிக்கும் இந்தப் பகுதியில் முக்கியமாக என்ன சொல்லுகிறார்கள்?
பெரும்பாலும் இதில் சொல்லுவது என்ன?
எங்கிருந்து இந்த விஷயத்தைப் பற்றி நாம் அறிகிறோம்?
இதில் எவை முக்கியமான நிகழ்வுகள்?
இந்தப் பகுதியில், எதைக் கற்றுக்கொள்ள, ஞாபகத்தில் வைத்துக் கொள்ளத் தேவை?
முக்கியமாக குறித்துக் கொள்ள வேண்டியவை: யார், என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி, எதற்கு?
ஆசிரியர் மாணவர்களுடன் இந்த முறையைச் செய்து காட்டிய பிறகு, மிக எளிதாக மாணவர்களால் இதைக் கடைபிடிக்க முடியும். எல்லா மாணவர்களாலும், எல்லாப் பணிகளையும் சிறப்பாகச் செய்ய முடியும், அப்படிச் செய்ய ஒவ்வொருவருக்கும் வாய்ப்புக்களைக் கொடுக்க வேண்டும். ஒருவர் தன் பணியைச் செய்யத் தடுமாறினால், மற்றவர்கள் பொறுமையாக அவருக்குத் தேவையான அவகாசம் கொடுக்க வேண்டும், பிறகு அவரை அரவணைத்து உரையாடலை முன்னெடுத்துப் போக உதவ வேண்டும்.

குழுக்கள் தங்கள் வேலையைச் செய்யும் பொழுது, ஆசிரியர் தங்கள் பங்குக்குச் சுற்றி வந்து மாணவர்களின் மீதும் அவர்களது செயல்பாடுகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால், அவரும் குழுவுடன் பங்கேற்று, அவர்களுக்கு ஆர்வமூட்டும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும், மாணவர்களிடம் கேள்விகள் எழுப்பி அவர்களை மேலும் தெளிவுபடுத்தலாம்.

இந்த முறையில் பழக்கம் வளர, நல்ல பயன் அளித்தால், பாடம் முழுவதையும் கூட இதே 'ரெஸிப்ரோகல் லர்னிங்’ முறையில் சொல்லித் தரலாம். மாற்றங்கள் செய்து பார்க்கலாம், உதாரணத்திற்கு மாணவரின் பங்களிப்பை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வைக்கலாம்.


குழுவாக அமைத்துக் கற்றுக் கொள்வதில் பரஸ்பர உதவி செய்வதனால் பாடத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. இதன் விளைவாக, படிப்பது ஒரு நல்ல அனுபவமாகும்! மாணவர்கள் முறையையும் புரிந்து கொள்வார்கள், அதே நேரத்தில் பாடத்தை எவ்வளவு தெளிவாக, ஆர்வமாகக் கற்கலாம் என்பதையும் அறிந்து கொள்வார்கள்.

இதனால்தான் எந்தவிதமான மாணவர்களாக இருந்தாலும் 'ரெஸிப்ரோகல் லர்னிங்’ முறையில் பயன் அடைகிறார்கள். பல வெளிநாட்டுப் பள்ளிகளில் இதை உபயோகித்ததில், மாணவர்கள் பாடப் புத்தகத்தில் கொடுத்திருந்ததை விடவும் அதிகமாகப் படித்து, தங்களுக்குப் புரிந்ததை தாராளமாக தங்கள் குழுவுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

ஆசிரியர் ஒவ்வொரு மாணவரையும் சம கண்ணோட்டத்துடன் ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் அவர்களாகவே படித்து, ஒருவருக்கு, ஒருவர் உதவி செய்து, ஊக்கப்படுத்திக் கொண்டு இருப்பதால், சமூக உணர்ச்சி வளர்ந்து ஒன்றிணைவார்கள். 'ரெஸிப்ரோகல் லர்னிங்’ முறையில், கற்றுத் தருவதின், சேர்ந்து படிப்பதின் விளைவாக மாணவர்கள் பொறுப்பு உள்ளவராகவும் இருக்க உதவுகிறது!

சுருக்கமாகச் சொன்னால், 'ரெஸிப்ரோகல் லர்னிங்’ என்பதில், கற்பிப்பதும், கற்பதும், ஒற்றுமை கூடுவதும் ஒன்றிணைகின்றன.

மாலதி சுவாமிநாதன், மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் 

REMO RK

About REMO RK -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Thanks for your comment