விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிக்கு வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 262வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
அவர் வாழ்ந்த ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

பின்னர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: புதிய பாடத்திட்டம் மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் முடிக்கப்பட்டு 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அச்சடிக்க செலவு அதிகம் ஆகியுள்ளதால் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணத்தில் வாங்க வேண்டியிருக்கும். தற்போது நடைபெற்று வரும் விடைத்தாள்கள் திருத்தம் செய்யும் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு பதிலாக வேறு ஆசிரியர்களை கொண்டு திருத்தம் செய்யப்படுகிறது. திருத்தம் செய்யும் பணிக்கு வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். போராட்டம் வாபஸ்: இந்நிலை யில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மணிவாசகன் கூறுகையில்,‘பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், தேர்வுத்துறை இயக்குநர் ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது திருத்தாத பழைய விடைத்தாளையும் திருத்துவோம். எங்கள் அமைப்பினர் தினமும் 40 விடைத்தாள்கள் வரை திருத்தும் திறன் படைத்தவர்கள். எனவே, விடைத்தாள் திருத்துவதில் இனி எந்த பிரச்சனையும் இருக்காது ’என்றார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post