அன்பான ஆசிரியர்களே !. உங்களுடைய படைப்புகளை பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய உதவுவீர் rktuitioncentre@gmail.com

Oct 2, 2018

vinotha

நாட்டின் முதல் பெண் ஆசிரியை

                   

நாட்டின் முதல் பெண் ஆசிரியை
நாம் பள்ளிக்கூடம் நடத்துவதை எதிர்ப்பவர்கள், பள்ளிக்கூடத்திற்குச் செல்கையில் என் மீது கற்கள், சாணி மற்றும் சேற்றை வீசுகிறார்கள். சேலை பாழாகிவிடுகிறது. அந்தச் சேலையோடு மாணவிகள் முன்னால் சென்று நிற்பதற்கு ஒருமாதிரியாக இருக்கிறது” என்று தனது கணவருக்கு கடிதம் எழுதுகிறார். பதில் கடிதம் வருகிறது.
“காலையில் பள்ளிக்குச் செல்லும்போது ஒரு பழைய சேலையைக் கட்டிக்கொள். பள்ளிக்குச் சென்றவுடன் நல்ல சேலையைக் கட்டிக்கொண்டுவிடு. மாலையில் மீண்டும் பழைய சேலையையே கட்டிக் கொண்டு வீட்டுக்குச் செல்” இப்படி பதில் எழுதுகிறார் கணவர். கடிதம் எழுதியவர் நாட்டின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் புலே. பதில் எழுதியவர் அவரது கணவர் ஜோதிராவ் புலே.இருண்ட காலத்தில் உன்னதமான ஆசிரியர் பணியை துணிச்சலோடு மேற்கொண்டவர் சாவித்ரிபாய் புலே.
ஒரு பெண் கல்வி கற்றால், அவரது கணவர் உண்ணும் உணவு புழுக்களாக மாறிவிடும் எனப் பயமுறுத்தி வந்த மூட நம்பிக்கைகள் அப்பிக்கிடந்த காலகட்டத்தில் தனது மனைவியை கல்வி கற்க வைத்ததோடு, ஆசிரியைக்கான பயிற்சியும் பெற வைத்திருக்கிறார் அவரின் கணவரான மகாத்மா ஜோதிராவ் புலே. இருவரும் இணைந்து பெண்களுக்காக தனியாக ஒரு பள்ளிக்கூடத்தை திறந்தார்கள். அப்பள்ளியில் ஆசிரியை பணியை தானே ஏற்றுக் கொள்கிறார் சாவித்ரிபாய் புலே. வீட்டுக்குள்ளே பெண்கள் பூட்டிக்கிடந்த காலத்தில் முதல் பெண் ஆசிரியை ஆனார். இன்று இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமைக்குரியவராய் திகழ்கிறார்.
br /> ஒரு கட்டத்தில் தொல்லை தாங்காமல் எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் ஒருவரை நடுச்சாலையில் வைத்து அறைந்தார் சாவித்ரி. அதற்குப்பிறகு தான் கற்களை எறிவதும், சாணியை வீசுவதும் அடங்கியது. அப்போதுதான் அவருக்கு மேற்கண்ட அனுபவம் ஏற்பட்டது. சாவித்ரியோடு இணைந்து ஆசிரியைப் பணியை மேற்கொண்டவர் பாத்திமா ஷேக் என்கிற இஸ்லாமியப் பெண்.சாவித்ரிபாய் புலேவின் ஆசிரியப்பணி அத்தனை இலகுவானதாயில்லை.
இந்த இளம் தம்பதியினர் எல்லாத் தரப்பு மக்களின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருந்தது. பாடசாலையை நோக்கி அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் ஒரு நாள் விடாது சாவித்ரிபாய் அவர்கள் மோசமான சங்கடங்களை எதிர்கொண்டார். கற்கள், சேறு மற்றும் கழிவுகளை அவர் கடந்து சென்ற போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் அவர் மீது தொடர்ந்து கல் விட்டெறிந்தனர். ஆனால், சாவித்ரிபாய் இவை ஒவ்வொன்றையும் அமைதியாகவும் அதே வேளையில் துணிச்சலாகவும் எதிர்கொண்டார்.
1831, ஜனவரி மாதம் 3ம் நாள், மகாராஷ்ட்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில், நைகோன் என்ற கிராமத்தில் வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சாவித்ரிபாய் புலே. இவரது தந்தை கான்டோஜி நைவஸ் பட்டேல், கிராமத் தலைவராக இருந்தவர். இவரின் திருமணம் ஒரு பால்யவிவாகம். தனது 9 வயதில் 13 வயது நிரம்பிய மகாத்மா ஜோதிராவ் புலேவின் துணைவியானார். ஜோதிராவ் புலேதான் சாவித்ரிக்கு ஆசிரியர். அடிப்படைக் கல்வியை தன் கணவரிடமே கற்றார். பின்னர் ஆசிரியர் பயிற்சியை முடித்த சாவித்ரி, வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளியை புனேவில் எள்ள பீடே வாடு என்ற இடத்தில் 1847ல் 9 பெண் குழந்தைகளுடன் புலே தம்பதிகள் தொடங்கினர்.
அதில் ஆசிரியராய், சாவித்ரிபாய் புலே பொறுப்பேற்று, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக விளங்கினார். 1849ல் மீண்டும் ஒரு பள்ளியை புலே தம்பதிகள் துவங்கினார்கள். அதுவே முதியோர், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் அனைத்து சாதியினருக்குமாக இந்தியா விலேயே உருவாக்கப்பட்ட முதல் பள்ளி. இதில் 150 பெண்களும், 100 ஆண்களும் படித்தனர். இந்தப் பள்ளிகள் அரசு பள்ளியைவிட சிறப்பாகச் செயல்பட்டன. கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்புடன், தொழில் பயிற்சியையும் அளித்தனர். 1852, நவம்பர் 14ல், பிரிட்டிஷ் அரசு தம்பதிகள் இருவருக்கும் சிறந்த ஆசிரியர்கள் என்ற பாராட்டையும் பரிசையும் வழங்கியது.
சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவும், சாவித்ரியும் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டனர். பல நலப்பணிகளில் ஈடுபட்டனர். 1800களில் வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பது, பிறகு முடி வளர்ந்தாலும் தொடர்ந்து மொட்டையடிப்பது மேட்டிக்குடியினரிடம் வழக்கத்தில் இருந்த ஒரு மூடப்பழக்கம். இதை எதிர்த்து சாவித்ரி போராடினார். மொட்டையடிக்கும் தொழிலில் இருந்தவர்களுடன் பேசி, இந்த மூடப்பழக்கத்துக்கு துணைபோகாமல் இருக்கும்படி கைவிடச் செய்தார். கணவனை இழந்த இளம்பெண்களை மேட்டுக்குடி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது அந்தக் காலத்தில் சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று. சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதும் நடந்தது. இப்படி பாலியல் சுரண்டல்களால் சில பெண்கள் கருவுற்று, அது வெளியே தெரியவந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலை செய்வதும் அதிகமாக இருந்தது.
இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணை தற்கொலையிலிருந்து மீட்டு அவருடைய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர் புலே தம்பதியினர். இப்படி பிறக்கும் சிசுக்களுக்கென்றே தனி இல்லமாக ‘பால் ஹத்யா பிரதிபந்தக் கிருஹா’ (சிசுக்கொலைத் தடுப்பு இல்லம்) ஒன்றைத் துவங்கினார். பாலியல் சுரண்டல்களிலிருந்தும், கட்டுப்பெட்டித்தனமான பழங் கலாச்சாரத்திலிருந்தும் பெண்கள் விடுபட வேண்டும் என்று இறுதிமூச்சு வரை குரல் கொடுத்தனர். தொடர்ந்து ‘மஹிளா சேவா மண்டல்’ என்ற பெண்கள் சேவை மையத்தை 1852-ம் ஆண்டு தொடங்கி தீண்டாமை, குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் போராடினார். பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்கு தமது கணவரோடு இணைந்து கடுமையாக உழைத்தார் சாவித்ரிபாய். மக்களின் துயரங்களைப் போக்க பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார்.
சாவித்ரிபாய் கல்வியாளராக மட்டுமல்லாமல், நவீனப் பெண்ணிய கவிதைகளையும் எழுதினார். இவர் எழுதிய முதல் கவிதை நூல் 1892-ல் வெளிவந்தது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி, பெண் உரிமை, தீண்டாமை ஆகிய அனைத்து விஷயங்கள் பற்றியும் கவிதை எழுதினார். கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் வகையில் ‘கவிதை மலர்கள்’ என்ற நூலை வெளியிட்டார்.கணவரின் மறைவுக்குப் பிறகு சமூகப் பணிகளை தொடர்ந்த சாவித்ரிபாய் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1897 மார்ச் 10ல் தன் 66ம் வயதில் உயிர் நீத்தார். இவரின் நினைவாக மத்திய அரசு 1998-ல் அவரது படம் போட்ட அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது. மராட்டிய அரசு அவர் பிறந்த தினமான ஜனவரி 3ம் நாளை பெண்கள் தினமாக அனுசரிக்கிறது. இவருடைய பெயரில் ஒரு பல்கலைக் கழகமும் செயல்படுகிறது.

                                                    

vinotha

About vinotha -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

Thanks for your comment