CBSE - தேர்வு தேதி இந்த வாரம் அறிவிப்பு!




சி.பி.எஸ்.இ., தேர்வுகள், வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாகவே நடத்தப்பட உள்ளன. இதற்கான கால அட்டவணை, இந்த வாரம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்ற, 20 ஆயிரம் பள்ளி கள், நாடு முழுவதும் செயல்படுகின்றன. இவற்றில் படிக்கும், 20 லட்சம் மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரலில் தேர்வு துவங்கி, மே முதல் வாரத்தில் தேர்வுகள் முடியும். மே இறுதி வாரம் அல்லது, ஜூன் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

இதையடுத்து, துணை தேர்வு மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள், ஜூலை வரை வெளியிடப்படும்.ஆனால், உயர்கல்வி மாணவர் சேர்க்கை, ஜூலை இறுதிக்குள் முடிந்து விடுவதால், பல மாணவர்கள், பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், உயர்கல்வியில் சேர முடியவில்லை. இதுகுறித்து, மாணவர்கள் தரப்பில், நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.இதையடுத்து, உயர்கல்வி மாணவர் சேர்க்கை முடியும் முன், தேர்வு முடிவுகள் வரும் வகையில், முன்கூட்டியே தேர்வுகளை நடத்த, சி.பி.எஸ்.இ.,க்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.

இதன்படி, இந்த ஆண்டு முதல், ஒரு மாதம் முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. அதாவது, தொழிற்கல்வி பாடங்களுக்கு, பிப்ரவரி இறுதியிலும், மற்ற பாடங்களுக்கு, மார்ச் முதல் வாரமும் தேர்வுகள் துவங்கி, மார்ச்சுக்குள் முடிக்கப்பட உள்ளன.இந்நிலையில், தேர்வு எப்போது துவங்கும்; எப்போது முடியும் என்ற விபரம், இந்த வாரம் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post