கல்விக் கடன் பெறும் வழிமுறைகள்..! விண்ணப்பிப்பது எப்படி?



பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பலர், கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல், தங்களுக்குப் பிடித்தமான படிப்பை கைவிட்டு, விருப்பம் இல்லாத படிப்பில் சேர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். திறமை இருந்தும் வறுமை காரணமாக கல்வி பெறுவது தடைபடக் கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
                                                                   
கல்வி கடன் பெற முன்பு போல வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. இதற்காகவே பிரத்தியேகமாக மத்திய அரசின் ‘வித்யாலட்சுமி போர்டல்' இயங்கி வருகிறது அதில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஏதேனும் மூன்று வங்கிகளை அதில் தெரிவு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலை குறித்தும் அதில் தெரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் உள்ள வேறு எந்தக் கடனும் கல்விக் கடன் பெறுவதை பாதிக்காது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற அனைத்துப் படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. 4 லட்சம் ரூபாய் வரை, 4 முதல் ஏழரை லட்சம் ரூபாய் வரை, ஏழரை லட்சத்திற்கு மேல் என மூன்று பிரிவாக கடன் வழங்கப்படுகிறது. ஏழரை லட்சம் ரூபாய் முதல் எவ்வளவு கடன் தொகை தேவைப்படுகிறதோ அந்தக் கடன் தொகைக்கு அடமானம் தேவை. 4 லட்சத்துக்கு மேற்பட்ட கடனுக்கு 5 சதவீதம் பயனாளி பங்குத்தொகை செலுத்த வேண்டும்.



கல்வி கடன் பெற்றவர்கள், படிக்கும் காலத்திலும், படித்து முடித்த பிறகு ஓராண்டு காலத்திற்கும் வட்டி செலுத்த வேண்டிய அவசியமில்லை. மானியத் தொகையாக வட்டியை அரசே செலுத்திவிடும். படிப்பு முடித்தவுடன் ஓராண்டு அல்லது வேலை கிடைத்த 6 மாதங்களுக்குப் பின்னர் கடன்தொகையைத் தவணை முறையில் செலுத்த வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கும்
கல்வி கடன் கிடைக்கும். ஆனால் வட்டி மானியம் கிடைக்காது.
ஏழரை லட்சம் ரூபாய் வரையான கடனை 4 முதல் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். அதற்கும் மேலான கடன் தொகையை 15 ஆண்டுகள்வரை கட்டலாம்.

கல்லூரி விடுதி, ஆய்வுக் கூடம், வெளிநாட்டுக்கான பயணச் செலவு, உபகரணங்கள், சீருடை, கணினி அல்லது மடிக் கணினிக்குரிய தொகை, ஆகியவற்றையும் சேர்த்துக் கடன் கேட்கலாம்.

கல்விக்கடன் பெற பான் கார்டு, ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, வருமான வரி சான்று ஆகிய ஆவணங்களை அளிக்க வேண்டியது அவசியம். எனவே பிளஸ் டூ முடித்த மாணவர்கள் விடுமுறை காலத்தில் இந்த ஆவணங்களுக்காக முறையாக விண்ணப்பித்து முன்கூட்டியே பெற்று வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் சேர்ந்த பின்னர் அதற்கான ஆவணத்தோடு உரிய சான்றிதழ்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

தகுந்த காரணமின்றி கல்வி கடன் நிராகரிக்கப்பட்டால் முதல் கட்டமாக பிராந்திய மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே நிராகரிக்க முடியும். 30 நாள் காலவரையறைக்குள் விண்ணப்பதாரருக்குக் கடன் அளிக்க வேண்டும் அல்லது நிராகரிப்புக்கான தகுந்த பதில் சொல்ல வேண்டும் என்பது விதிமுறையாகும்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post